சென்னையில் குளு..குளு..மழை மகிழ்ச்சியில் சென்னை மக்கள்.
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கருமேகங்கள் சூழ்ந்துள்ளதால், மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவகாற்று வலுத்துள்ளதால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 செ.மீ. மழையும், பெரியாறு அணை, நடுவட்டம், வால்பாறை ஆகிய இடங்களில் தலா செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை நான்கு சென்டிமீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். தற்போதைய பதிவுப்படி 2.4 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது மழையின் அளவு 37 சதவீதம் குறைந்துள்ளது.
கத்திரி வெயில் முடிந்த பிறகும், வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாமல் இருந்ததால், மக்கள் தவித்து போகினர். நேற்று முன்தினம், கொஞ்சம் மழை பெய்தது. மக்கள் மனதை நனைத்தது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது சென்னையில் மழை பெய்வது போல் மேகமூட்டங்கள் காணப்பட்டாலும் ஏமாற்றமே மிஞ்சியது. சென்னை தற்போது, கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. 4 ஏரிகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துட்டது. தலைநகர் சென்னையை போல், மற்ற மாவட்ட மக்களும் தண்ணீருக்காக அலைய கூடிய சூழ்நிலை நிலவுவதால், மழையை நம்பியே மக்கள் இருக்கின்றனர்.
Leave a Comment